
பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி -27 – கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் பகுதியில் ஓட்டுநரிடமிருந்து போலீசார் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டி சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ தொடர்பாக செராஸ் மாவட்ட போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.
நேற்று காலை ஜாலான் பெர்சியாரான் ஜாலில் உத்தமாவில் நடைபெற்ற இச்சம்பவத்தின் போது நான்கு போலீஸ் அதிகாரிகள் குற்றத் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று செராஸ் போலீஸ் தலைவர் ரோஸ்டி டாவுத் (Rosdi Daud) தெரிவித்திருந்தார்.
அச்சமயத்தில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததால், ஓட்டுநருக்கு சம்மன் வழங்கி வாகனத்தை உடனடியாக நகர்த்துமாறு அறிவுறுத்தினர்.
அதே நேரத்தில், பொதுமக்கள் குற்றச்செயல்கள் குறித்து நேரடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க உதவும் ‘Volunteer Smart Phone Patrol (VSP)’ செயலியை பதிவிறக்கம் செய்யவும் ஓட்டுநருக்கு பரிந்துரைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வாகனத்தின் விவரங்கள் பதிவிற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. மேலும், போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததற்காக இரண்டு வாகனங்களுக்கு சம்மன் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவத்தை தவறாக புரிந்துகொண்டு யூகங்கள் பரப்ப வேண்டாம் என பொதுமக்களிடம் போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது. போலீஸ் துறையின் நேர்மையும் மக்களின் நலனும் எப்போதும் பாதுகாக்கப்படும் என்று ரோஸ்டி வலியுறுத்தினார்.
வைரலான டிக்-டாக் வீடியோவில், போலீசார் ஓட்டுநரைச் சுற்றி நின்று பேசும் காட்சி இடம்பெற்றிருந்தது.



