கோலாலம்பூர், அக்டோபர்-17 – லெபனானில் ஐநாவின் அமைதிக் காப்புப் பணியில் (UNIFIL) ஈடுபட்டுள்ள Malbatt 850-11 எனப்படும் மலேசியக் காலாட்படை, தாங்கள் தாக்கப்பட்டால் திருப்பித் தாக்கலாம்.
அந்த மத்தியக் கிழக்கு நாட்டில் மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகள் குறிப்பாக இஸ்ரேலியப் படைகள் தாக்கினால், மலேசியப் போர்ப்படைகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள திருப்பித் துப்பாக்கியால் சுடும் உரிமையைப் பெற்றுள்ளன.
ஆனால், தற்காப்புக் காரணங்களுக்காக இல்லாமல், வெறுமனே எதிர்தரப்பைத் தாக்குவதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை என, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் நோர்டின் (Datuk Seri Mohamed Khaled Nordin) மக்களவையில் தெரிவித்தார்.
UNIFIL படையின் நோக்கமே லெபனானில் அமைதிக்காப்பில் ஈடுபடுவதுதான் என்றார் அவர்.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும் போது என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பதையெல்லாம் UNIFIL வழிகாட்டியாக வெளியிட்டுள்ளது.
ஒருவேளை நிலைமை மோசமானால் மலேசியப் படைகளை தாயகத்திற்குத் திருப்பி அழைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
ஆனால் இறுதி முடிவு அமைதிக்காப்புப் படையின் கையில் தான் உள்ளதென காலிட் நோர்டின் சொன்னார்.
லெபனானில் இலங்கை மற்றும் இந்தோனீசியப் படைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறித்து அமைச்சரிடம் கேட்கப்பட்டது.