வரலாற்றில் இல்லாத அளவுக்கு 30,000 பேரை வேலை நீக்கம் செய்யும் அமேசான்

வாஷிங்டன், அக்டோபர்-28,
உலகின் மிகப்பெரிய இணைய வணிக நிறுவனமான அமேசான், பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சுமார் 30,000 பணியாளர்கள், அதாவது நிறுவனத்தின் அலுவலகப் பணியாளர்களில் சுமார் 9 விழுக்காட்டினர், இந்தப் பணிநீக்கத்தால் பாதிக்கப்படக்கூடும்.
செலவுகளைக் குறைத்து, AI அதிநவீன தொழில்நுட்பத் துறையில் அதிக முதலீடு செய்யும் நோக்கில் அமேசான் இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமேசானின் கிடங்குகள் மற்றும் விநியோகப் பிரிவுகள் இதில் பாதிக்கப்படாது என தெரிகிறது.
என்றாலும் அமேசான் சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகவில்லை.
நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆண்டி ஜாஸி (Andy Jassy), AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எதிர்காலத்தில் சில பாரம்பரிய வேலைகளை தேவையற்றவையாக மாற்றும் என ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றில் இல்லாத அளவுக்கு 30,000 பேரை அமேசான் ‘வீட்டுட்டு அனுப்புவது’ தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.



