
கோலாலம்பூர் – ஜூலை-15,
ஏற்றுமதி வரி ஏய்ப்பு செய்து, பழைய இரும்பு சாமான்களை வெளிநாடுகளுக்குக் கடத்தி வந்த கும்பலுக்கு எதிரான சோதனையில், கனரக ஆயுதமேந்தியப் படையைக் களமிறக்கியது தேவையற்றது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC-யின் அச்செயல் மனிதநேயமற்றது என, சமூக ஆர்வலர் சுரேந்தர் செல்வராஜு சாடினார். சோதனை செய்யப்பட்டவை ஒதுக்குப்புறமான இடங்கள் மட்டுமல்ல; பொது மக்கள் குடியிருப்புகளும் தான்.
அங்கு, தானியங்கி துப்பாக்கிகள் உட்பட கனரக மற்றும் உயர் தொழில்நுட்ப ஆயுதங்களைக் கொண்டுச் செல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது என சுரேந்தர் கேள்வி எழுப்பினார்.
அவ்வீடுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னால் இது நடந்திருப்பது அதைவிட வேதனையாகும் என, 15-ஆவது பொதுத் தேர்தலில் கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுயில் சுயேட்சையாகப் போட்டியிட்டவருமான அவர் சொன்னார்.
இதுவொன்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுதக் கூடிய மிகக் கடுமையான குற்றமலால்; வரி ஏய்ப்பு தான்.
இன்னொரு விஷயம் என்னவென்றால், கனரக ஆயுதமேந்திச் செல்ல MACC அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? அது போலீஸின் அதிகாரத்திற்கு உட்பட்டதாயிற்றே என சுரேந்தர் சுட்டிக் காட்டினார்.
பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கான நியாயமான காரணங்கள் இன்றி, பொது மக்கள் மீது இராணுவ அணுகுமுறையைத் திணிப்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று. எனவே, இவ்விஷயம் விசாரிக்கப்பட்டு, கனரக ஆயுதப் பயன்பாடு தொடர்பான MACC நடைமுறை பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென, அறிக்கையொன்றில் சுரேந்தர் வலியுறுத்தினார்.
முன்னதாக 5 மாநிலங்களில் ஏக காலத்தில் நடத்தப்பட்ட அச்சோதனைகளில் MACC—யின் கனரக ஆயுதமேந்தியப் படை களமிறக்கப்பட்ட படங்கள் வைரலாகியிருந்தன.