
கோலாலம்பூர், ஏப்ரல்-17, வருகையாளர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருத்தில் கொண்டு KL Tower எனப்படும் கோலாலம்பூர் கோபுரம் இன்று முதல் தற்காலிக மாக மூடப்படுகிறது.
புதிய நிர்வாகம் பராமரிப்பு மற்றும் தரமுயர்த்தும் பணிகளை மேற்கொள்ள ஏதுவாகவும் அது மூடப்படுவதாக, தொடர்புத் துறை அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகின் மிக உயரமான தொலைத்தொடர்பு கோபுரங்களில் ஒன்றான இந்த KL Tower, மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
எது எப்படி இருப்பினும் இக்கோபுரம் அரசாங்கத்தினுடையதே என அமைச்சு தெளிவுப்படுத்தியது.
ஏப்ரல் 1 முதல் KL Tower-ரின் நிர்வாகம் LSH Service Master Sdn Bhd (LSHSM) நிறுவனத்தின் கைகளுக்கு மாறியுள்ளது.
எனவே Menara Kuala Lumpur Sdn Bhd (MKLSB) நிறுவனம் மார்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகும் அங்கு தொடர்ந்து செயல்படுவது சட்டவிரோதமாகும்.
அக்கோபுரத்தை காலி செய்யுமாறு ஏப்ரல் 3, ஏப்ரல் 9 என 2 முறை MKLSB நிறுவனத்துக்கு கூட்டரசு நில ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதையும் அமைச்சு சுட்டிக் காட்டியது.
கோலாலம்பூர் கோபுர பராமரிப்பு குத்தகை தொடர்பில் மார்ச் 31-ஆம் தேதியே வெளியிட்ட அறிக்கையில், இந்த கையகப்படுத்தல் கோபுரத்தின் செயல்பாட்டையும் ஊழியர்களையும் பாதிக்காது என அமைச்சு உத்தரவாதம் அளித்திருந்தது.
கோபுரம் வழக்கம் போல் செயல்பட புதியப் பராமரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சு கூறியிருந்தது.