
கோலாலம்பூர், நவம்பர்-16 – லோகதீபன் முனியப்பன்…
10 வயதில் தந்தையை இழந்தார்… ஆனால் அதைவிட காயப்படுத்தியது, அப்போது உறவினர்கள் சொன்ன கொடூரமான வார்த்தைகள்…
அவர்களின் குடும்பம் “வறுமையில் வாடிய குடும்பம்” என பத்திரிகையிலும் வெளிவந்தது.
தாயார் 4 குழந்தைகளை தனியாக வளர்த்தார். உதவி கேட்ட நேரங்களில் “உங்கள் குடும்பத்தின் மோசமானத் திட்டமிடல் எங்கள் பிரச்னை இல்லை” எனக் கூறி அவமானமும், துச்சப் பார்வையும், கேலிச் சொற்களுமே பரிசாகக் கிடைத்தன.
கணினிப் பொறியியலாளராக வேண்டும் என்ற லோகதீபனின் கனவையும் “நடப்பதைப் பற்றி பேசு” என பலர் கிண்டல் செய்தனர்.
அதைக் கேட்டு துவண்டுபோகும் போதெல்லாம் அவரின் தாயார் தினமும் ஒரு வார்த்தை மட்டுமே சொல்லுவார்…
“உன் வேலை படிக்கிறது.அதை மட்டும் பாரு”
அந்த வார்த்தையே லோகதீபனின் வேதவாக்கு ஆனது…
இன்று…
UMPSA எனப்படும் அல்-சுல்தான் அப்துல்லா மலேசிய பஹாங் பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேறிய பட்டதாரி.
அது மட்டுல்ல, 25-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மிகச் சிறந்த அடைவுநிலைக்காக, தங்க விருது வெள்ளி விருது என 2 முக்கிய விருதுகளை வென்ற ஒரே மாணவரும் கூட…
லோகதீபனின் சாதனையால், துணை வேந்தரே வியந்துபோனார்.
இது வெறும் கதையல்ல…வலி வெற்றியாக மாறியச் சம்பவம்.
வறுமை விதி அல்ல என்பதை லோகதீபன் ஊருக்கே உணர்த்தியத் தருணம்…



