
வழிபாட்டுத் தல சர்ச்சைகள் அமைதியாகவும் சட்டப்படி தீர்க்கப்பட வேண்டும்; மாமன்னர் அறைகூவல்
கோலாலாம்பூர், பிப்ரவரி-11,
கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை கையாள்வதில் பரஸ்பர மரியாதை மிக முக்கியம் என, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்லாம் அனைவரிடமும் மரியாதையை வலியுறுத்துகிறது என்றும், பிற மதத்தவர்கள் தங்கள் மதத்தை கடைப்பிடிக்க தடையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேசமயம், மற்ற சமயத்தாரும் முஸ்லீம்கள் மீது மரியாதை காட்டுவது அவசியம் எனக் குறிப்பிட்ட மாமன்னர், இது தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் என தெரிவித்தார்.
மத விஷயங்களை அரசியல் கருவியாக்கக் கூடாது என்றும், அவை சட்டத்தின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் மாமன்னர் நினைவுறுத்தினார்.
2018 ல் ஜோகூரில் நடந்த ஒரு கோயில் இடிப்பு பிரச்னையில் நல்லிணக்க அடிப்படையில் தாமே மத்தியஸ்தம் செய்து வைத்ததை நினைவுபடுத்திய அவர், இத்தகைய பிரச்னைகள் அமைதியாகவும், விவேகத்துடனும், சட்டப்படி தீர்க்கப்பட வேண்டும் எனக் கூறினார்.
அனுமதியில்லாமல் மற்றவர்கள் நிலத்தில் வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட்ட விவகாரம் பேச்சுப் பொருளாகியுள்ள நிலையில், மாமன்னர் அவ்வாறு அறுவுறுத்தியுள்ளார்.
முன்னதாக தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஏரன் அகோ டகாங், மாமன்னர் அவர்களைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.



