
கோலாலம்பூர், டிசம்பர்-3 – வாழ்க்கைச் செலவின உயர்வோடு மக்கள் போராடி வரும் நிலையில், நெகிரி செம்பிலான் மந்திரி பெசாருக்கு சம்பள உயர்வு முக்கியமா என, பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சஞ்சீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பல்வேறு புதிய வரிச்சுமைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர்; விலைவாசியும் உயர்ந்து வருகிறது.
ஆனால் அதைப் பற்றி கண்டுகொள்ளாத PH-BN தலைமையிலான நெகிரி செம்பிலான மாநில கூட்டணி அரசாங்கம், மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூணின் (Datuk Seri Aminuddin Harun) சம்பளத்தை 19,000 ரிங்கிட்டிலிருந்து 30,000 ரிங்கிட்டுக்கு உயர்த்துவதில் ஆர்வம் காட்டுவதாக சஞ்சீவன் தனது X தளத்தில் கூறினார்.
சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை ஏற்றவும் அவர்கள் திட்டமிட்டிருப்பதாக, பெர்சாத்து கட்சியின் மலாய்க்காரர் அல்லாத உறுப்பினர்களுக்கான Bersekutu பிரிவின் துணைத் தலைவருமான அவர் சொன்னார்.
அந்த சம்பள உயர்வு பரிந்துரையை முன்னதாக மாநில சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் லாபு சட்டமன்ற உறுப்பினருமான பெரிக்காத்தான் நேஷனலின் ஹனிஃபா அபு பாக்காரும் (Hanifah Abu Bakar) கடுமையாக எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.
மக்களின் வாழ்க்கைச் செலவின உயர்வைக் கருத்தில் கொண்டு, அந்த சம்பள உயர்வை மீட்டுக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.
எனினும், அதற்கு பதிலளித்த மந்திரி பெசார் அமினுடின், மக்களின் நலனைப் புறக்கணிக்காமல், அப்பரிந்துரை ஆழமாக ஆராயப்பட்டு தான் முடிவெடுக்கப்பட்டதாகச் சொன்னார்.
மற்ற மாநிலங்களைக் காட்டிலும் நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மிகக் குறைவாக இருப்பதால் தான், அதனை உயர்த்த முடிவெடுக்கப்பட்டது.
பார்க்கப் போனால் ஏற்கனவே அது உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்; ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று தாக்கம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அது ஒத்தி வைக்கப்பட்டதாக அமினுடின் விளக்கினார்.
நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தில் கடந்த நவம்பர் 28-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை மறு ஆய்வு செய்யும் சட்டத் திருத்தமும் அடங்கும்.