
கோலாலம்பூர், நவம்பர் 19 – உடல் மற்றும் மன ரீதியாக எந்தவித குறைகளுமின்றி இருப்பவர்களே வாழ்வில் முன்னேற்றமடையாததற்கு ஆயிரம் கரணங்களைச் சொல்லும் பொழுது, கற்றல் சிரமம் மற்றும் வளர்ச்சி தாமதத்துடன் பிறந்த மலேசியர் ஒருவர் இன்று ஆசிரியராக உருவாகியிருப்பது பெரும் சாதனை என்றுதான் கூற வேண்டும்.
10 முறை SPM தேர்வையும், 2 முறை STPM தேர்வையும் எழுதிய அவர், பல வருடப் போராட்டங்களுக்குப் பின், தனது 37 வது வயதில் ஆசிரியராக நியமனம் பெற்றிருப்பது அனைவருக்கும் பெரும் ஊக்கமாக உள்ளது.
சிறுவயதிலிருந்தே பேச்சு மற்றும் தகவல் புரிதலில் சிரமத்தை எதிர்நோக்கியிருந்த அவருக்கு பள்ளியில் உடல் மற்றும் மனதளவில் சவால்கள் மற்றும் பகடிவதைகளுக்கு ஆளாகியிருந்தார். ஆனால் கல்வியைத் தொடரும் உத்வேகத்தை மட்டும் அவர் என்றுமே கைவிடவில்லை.
இரண்டாவது முறையாக எழுதிய STPM தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர், DPLI மற்றும் KPLI ஆசிரியர் பயிற்சி சான்றிதழையும் வெற்றிகரமாக முடித்தார். அதே வேளை மருத்துவமனை, பள்ளி, முதியோர் இல்லங்களில் பாதுகாப்பு பணியாளராக வேலை புரிந்து வந்த அவர், தந்தைக்கு நெற்பயிரிடுதல் உதவியையும் செய்து வந்தார்.
ஆசிரியர் நேர்முகத் தேர்வின்போது , தனது OKU அட்டை குறித்து நேர்மையாக விளக்கிய அவர், தேர்வறையிலிருந்து வெளியே வந்ததும் உணர்ச்சிவசப்பட்டு அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.
37வது வயதில் பெற்ற இந்த ஆசிரியர் நியமனம், அவரது குடும்பத்தையும், சமூக ஊடகத்தில் அவரது கதையைப் பாராட்டி வரும் ஆயிரக்கணக்கான மக்களையும் பெருமைப்பட வைத்துள்ளது. விடாமுயற்சி, முயற்சி, குடும்ப ஆதரவு இருந்தால் எந்தத் தடையையும் உடைத்தெறிந்து வாழ்வில் முன்னேற்றமடைய முடியும் என்பதற்கு இவரே தக்க சான்றாவார்.



