கோலாலம்பூர், டிசம்பர்-31, சக வீடற்றவரை கடந்த மாதம் கொலைச் செய்ததாக 39 வயது ஆடவர் இன்று கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
நவம்பர் 23-ஆம் தேதி இரவு 10 மணி வாக்கில் பிரிக்ஃபீல்ட்ஸ் ஜாலான் துன் சம்பந்தன் அருகேயுள்ள பாலத்திற்கு அடியில், பி.சரவணன் என்ற 45 வயது ஆடவரை கொன்றதாக, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
எனினும், கொலைக் குற்றம் உயர் நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் வருவதால், 39 வயது அய்மான் அப்துல்லாவின் (Aiman Abdullah) வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
அச்சம்பவம் முதலில் திடீர் மரணமாகவே வகைப்படுத்தப்பட்டிருந்தது;
எனினும், தலையில் கூர்மையற்ற ஆயுதம் பட்டதாலேயே சரவணன் உயிரிழந்தது சவப்பரிசோதனையில் உறுதியானதால், கொலைச் சம்பவமாக மாற்றப்பட்டது.
சம்பவ இடத்திலிருந்த CCTV கேமரா பதிவின் வழி கொலையாளியைப் போலீஸ் கண்டுபிடித்து, டிசம்பர் 19-ஆம் தேதி கைதுச் செய்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், சாகும் வரை தூக்குத் தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன் 12-க்கும் குறையாத பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
வழக்கு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி செவிமெடுப்புக்கு வருகிறது.