
தெலுக் இந்தான், செப்டம்பர்-21,
நேற்று PLUS நெடுஞ்சாலையில் போலீஸார் துரத்திச் சென்றதில், வீடு புகுந்து திருடிய சந்தேகத்தில் 35 வயது நபர் கைதானார்.
பேராக் போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் அதனை உறுதிப்படுத்தினார்.
மதியம் 12.30 மணியளவில் மஞ்சோங் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் காணப்பட்ட அந்நபர், மஞ்சோங் தாப்பா வழியாக தப்பிச் செல்ல முயன்றார்.
இதனால் இரு தரப்புக்குமிடையிலான வாகன துரத்தல் PLUS நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் நீடித்தது.
போலீஸார், ஒரு கட்டத்தில் வாகனத்தை நிறுத்தும் நோக்கில் சந்தேக நபரின் கார் டயர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பின்னர், Behrang R&R பகுதியில் வெற்றிகரமாக அக்கார் தடுத்து நிறுத்தப்பட்டது.
காரை பரிசோதித்ததில், வீடு புகுந்து திருடப் பயன்படுத்தப்பட்ட சிறப்பு கருவிகள் மற்றும் போலீஸ் ஜேக்கேட்டும் கண்டுபிடிக்கப்பட்டன.
சந்தேக நபர், மேல் விசாரணைக்காக மஞ்சோங் மாவட்ட போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டார்.