
புத்ராஜெயா, ஆகஸ்ட்-3,
மலேசியாவில் வீடுகளில் நிகழும் தீ விபத்துகளில் சுமார் 60 விழுக்காட்டுச் சம்பவங்களுக்கு, மின்சாரக் கோளாறே காரணமாகும்.
தீயணைப்பு – மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் Datuk Seri Nor Hisham Mohammad அதனைத் தெரிவித்தார்.
பாதுகாப்பற்ற மின்சார கம்பி இணைப்பு, நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் மின்சார இணைப்பை மாற்றியமைத்தல், அளவுக்கதிகமாக மின்சாரப் பொருட்களின் பயன்பாடு உள்ளிட்டவை வீட்டில் தீ சம்பவங்கள் ஏற்படக் காரணம் என்றார் அவர்.
வீட்டில் மின்சார இணைப்பின் பாதுகாப்பு அம்சங்களை பலர் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
குறிப்பாக பழைய மின் கம்பி இணைப்பு, அடிக்கடி _trip_ ஆகும் சுயிஸ் விசைகள் தவிர குளிரூட்டி, தண்ணீர் சூடாக்கி, _chest freezer_ எனப்படும் குளிர்பதனப்பெட்டி போன்ற அதிக மின்சாரப் பயன்பாட்டை உட்படுத்தும் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை அவர் சுட்டிக் காட்டினார்.
பழுதடைந்த ஃபியுஸை (fius) அப்படியே இணைப்பது, மின்சார பாதுகாப்பு முறையை மாற்றியமைப்பது போன்ற தவறுகளால் பெருந்தீ ஏற்படும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.
எனவே, வீடுகளில் மின்கசிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய 10 முதல் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை, அங்கீகரிக்கப்பட்ட மின்சார வல்லுநர்களை அழைத்து உரிமையாளர்கள் பரிசோதனை நடத்த வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
மின்சாரம் தவிர, சமைப்பதும் ஒரு வகையில் வீடுகளில் தீ ஏற்படக் காரணமாகி விடுகிறது.
குறிப்பாக, சமையல் அடுப்பை கவனக்குறைவுடன் விட்டுச் செல்வது அல்லது எரிவாயு கசிவு ஏற்படுவது போன்ற காரணங்களை Nor Hisham சுட்டிக் காட்டினார்.