
கோலாலம்பூர் – ஆக 12 – ஜூலை 31 ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 13,060 தொடர் ரஹ்மா மடானி ( Rahmah Madani ) விற்பனைத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி தெரிவித்தார். இத்திட்டத்தில் மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் 15,626,464 ( ஒரு கோடியே 56 லட்சத்து 26,464 ) பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது Payung Rahmah திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மற்றும் வாழ்க்கைச் செலவைக் குறைக்க உதவும் ஒரு முக்கிய செயல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்று அவர் கூறினார்.
இந்தத் திட்டம், உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்கள் இரண்டையும், ஒரு குறிப்பிட்ட பகுதியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் தற்போதைய சந்தை விலையை விட 10 முதல் 30 விழுக்காடு வரை குறைந்த விலையில் விற்பனை செய்கிறது என்று இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது அர்மிசான் தெரிவித்தார்.
இந்த ஆண்டு 222 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் கூட்டரசு பிரதேசங்களில் உள்ள 40 மண்டலங்களை உள்ளடக்கிய மொத்தம் 20,000 ரஹ்மா மதனி விற்பனைத் தொடர்களை நடத்த இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.