ஜோகூர் பாரு, டிசம்பர்-5, கையிருப்பு குறைந்த காரணத்தால் நாட்டில் காய்கறி விலைகள் 50 முதல் 80 விழுக்காட்டுக்கும் மேல் உயர்ந்துள்ளன.
பல மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் விவசாய நிலங்களும் காய்கறி தோட்டங்களும் அழிந்துபோயிருப்பதே அதற்கு காரணம்.
குறிப்பாக ஜோகூர், மலாக்கா, பேராக், கிளந்தான், திரங்கானு மாலங்களில் நூற்றுக்கணக்கான ஹெக்டர் விவசாய நிலங்களும் காய்கறி தோட்டங்களும் பாதிக்கப்பட்டதாக, மலேசியக் காய்கறிகள் பயிரிடுவோர் சம்மேளனத்தின் தலைவர் லிம் செர் கிவீ (Lim Ser Kwee) கூறினார்.
இந்நாட்டுக்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் தாய்லாந்திலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
இதனால் காய்கறி கையிருப்பு கடும் வீழ்ச்சி கண்டு, கணிசமான விலையேற்றத்திற்கு வித்திட்டிருப்பதாக அவர் சொன்னார்.
தற்போது வெள்ளம் வற்றுவதற்காக விவசாயிகளும் தோட்டக்காரர்களும் காத்திருக்கின்றனர்.
அதன் பிறகே மறுபயிரீடு செய்ய முடியும்; அதற்கு எப்படியும் ஒன்றிலிருந்து இரண்டு மாதங்கள் பிடிக்கலாம்.
ஆனால் மத்திய ஜோகூரில் இம்மாத மத்தியிலிருந்து அடுத்தாண்டு தொடக்கம் வரை இரண்டாம் வெள்ள அலை ஏற்படலாம் என கணிக்கப்பட்டிருப்பதால், மறுபயிரீடு மேலும் தள்ளிப் போகலாமென செர் கிவீ கூறினார்.