Latestமலேசியா

அதீத வெப்பம்; காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்க்கவும் – சுகாதார அமைச்சு வலியுறுத்து

கோலாலம்பூர், மார்ச் 25 -தற்போது நிலவும் கடும் வெப்ப அலையினால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதோடு , வெப்ப அலை தொடர்பான நோய்களைத் தவிர்ப்பதற்காக, மக்கள் தங்கள் வெளி நடவடிக்கைகளை கவனமாகத் திட்டமிட வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு ஆலோசனை தெரிவித்துள்ளது .

காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் வெளியில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பெர்லிஸ், பினாங்கு, பேராக் மற்றும் பஹாங் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெப்பநிலை அதிகரித்திருப்பதோடு , சில பகுதிகளில் தொடர்ச்சியாகக் குறைந்தது மூன்று நாட்களுக்குத் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியது.

வெளிர் நிற, தளர்வான ஆடைகளை அணிவது, தொப்பிகள் அல்லது குடைகளைப் பயன்படுத்துவது, அடிக்கடி தண்ணீர் அருந்துவது உட்பட நடைமுறை நடவடிக்கைகளையும் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

மேலும், பூட்டப்பட்ட வாகனங்களில் குழந்தைகளை விட்டுச் செல்ல வேண்டாம் என்றும், தலைச்சுற்றல், குமட்டல் அல்லது தசைப்பிடிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

அதிகப்படியான வெப்பத்தில் நீண்ட நேரம் இருப்பது, லேசான சோர்வு மற்றும் தலைவலி முதல் வெப்பத்தாக்கம், உடலில் நீர் பற்றாக்குறை, மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான பாதிப்பு போன்ற உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுத்தக்கூடும் என்று அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்துள்ளது.

நீண்ட நேரம் நீடிக்கும் வெப்பமான வானிலைக்கு ஆளாகும் அனைத்து நபர்களுக்கும் வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இருப்பினும், குழந்தைகள், முதியவர்கள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், வெப்பத்திற்கு ஆளாகும் தொழிலாளர்கள் மற்றும் வெப்பமான சூழலில் உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு வெப்பத்தாக்கம் போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!