![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/Screenshot-2025-02-06-at-9.51.45-AM.png)
பஞ்சாப், பிப்ரவரி-6 – அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்க இராணுவ விமானத்தின் மூலம் அவர்கள் பஞ்சாப் மாநிலம் வந்து சேர்ந்தனர்.
முந்தைய அமெரிக்க அரசாங்கங்களும் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், கள்ளக்குடியேறிகள் அமெரிக்க இராணுவ விமானத்தில் திருப்பியனுப்பப்பட்டது இதுவே முதன் முறையாகும்.
ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு அவர்கள் தத்தம் மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.
மீண்டும் அமெரிக்க அதிபரானது முதல், கள்ளக்குடியேறிகளுக்கு எதிராக டோனல்ட் டிரம்ப் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ஏராளமானோர் நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் டிரம்ப்பும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஒரு வாரத்தில் சந்தித்து பேசும் போது, இந்தக் கள்ளக்குடியேறிகள் விவகாரமும் முக்கியத்துவம் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லைகளில் கள்ளக்குடியேறிகளைத் தடுக்காத மெக்சிகோ, கனடா போன்ற அண்டை நாடுகளுக்கு அமெரிக்கா அதிரடியாகக் கூடுதல் வரி அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.