
கோலாலம்பூர்- ஆகஸ்ட்-2 – பரஸ்பர வரி விகிதத்தைக் குறைப்பது தொடர்பில் அமெரிக்காவுடன் நடத்தியப் பேச்சுவார்தையில், சுமார் 7,000 பொருட்களுக்கு பூஜ்ய வரி விதிக்க மலேசியா ஒப்புக் கொண்டுள்ளது.
அமெரிக்கா பட்டியலிட்ட 11,260 பொருட்களில் இது 61 விழுக்காடாகும் என, முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் Tengku Datuk Seri Zafrul Abdul Aziz தெரிவித்தார்.
சந்தை வாய்ப்பை வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையிலான வாணிப உறவை மேலும் தாராளமயமாக்கவும் மலேசியா அதற்கு ஒப்புக் கொண்டது.
என்றாலும் அமெரிக்கா வைத்த சில முக்கியக் கோரிக்கைகளில் அரசாங்கம் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளவில்லை என்றார் அவர்.
வாகனங்கள், புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான கலால் வரி அகற்றம், அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி உரிமத்தை நீக்குவது, வியூகத் துறைகளில் பங்குரிமையை தாராளமயமாக்குவது, பூமிபுத்ராக்களின் சிறப்புச் சலுகைகளை அகற்றுதல் ஆகியவை அவற்றிலடங்கும்.
வரி விகிதத்தைக் குறைப்பதே நோக்கமாக இருந்தாலும், அதற்காக நாட்டின் இறையாண்மையை தாரை வார்க்க முடியாது என்பதில் கடைசி வரை தாங்கள் உறுதியாக இருந்ததாக Zafrul சொன்னார்.
ஆகஸ்ட் 1 முதல் மலேசியப் பொருட்களுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்த அமெரிக்கா, பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு நேற்று அதனை 19 விழுக்காட்டுக்குக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.