
கோலாலாம்பூர், நவம்பர்-5 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, 2022 முதல் கடந்த செப்டம்பர் 26 வரை பல்வேறு அமைச்சுகள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகள் தொடர்பான 87 விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளது.
ஆக அதிகமாக, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN மீது 4 வழக்குகள் பதிவாகியுள்ளதாக, பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலீனா ஒத்மான் சையட் மக்களவையில் தெரிவித்தார்.
இரண்டாவது இடத்தில் உள்துறை அமைச்சு 11 வழக்குகளுடன் பட்டியலிடப்பட்டுள்ளது; கல்வி அமைச்சும் நிதி அமைச்சும் தலா 8 வழக்குகளுடன் உள்ளன.
பிரதமர் துறை 7 வழக்குகளைப் பதிவுச் செய்துள்ளதாக அவர் சொன்னார்.
தற்காப்பு அமைச்சு, கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சு, சுகாதார அமைச்சு, உயர்கல்வி அமைச்சு ஆகியவை, 4 முதல் 6 வழக்குகளைக் கொண்டுள்ளன.
மேலும் சில அமைச்சுகள், ஒன்று முதல் மூன்று விசாரணை அறிக்கைகள் வரை பதிவுச் செய்துள்ளன.
இவ்வெண்ணிக்கை MACC-யின் அதிகாரப்பூர்வ தகவல்களிலிருந்து பெறப்பட்டது என்றும், ஊழலைத் துடைத் தொழிக்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இது காட்டுவதாகவும் அசாலீனா கூறினார்.



