Latestஉலகம்

ஆயத்தொலா கொல்லப்பட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு; பற்றி எரியும் ஈரான்

வாஷிங்டன், மார்ச்-1-அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த ஈரானிய உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார்.

ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதை, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தினார்.

தனது Truth Social சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில், “நீதி நிலைநாட்டப்பட்டது” எனக் குறிப்பிட்டு, “ஈரான் மக்களுக்கு தங்கள் நாட்டை மீண்டும் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இது” என ட்ரம்ப் தெரிவித்தார்.

ஆயதொலாவுடன், இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டதாக ட்ரம்ப் கூறிக் கொண்டார்.

எனினும் மேற்கொண்டு ஆதாரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.

என்றாலும், வெளியான புதிய துணைக்கோளப் படங்களில், ஆயதொலாவின் பாதுகாப்பு வளாகம் கடுமையாக சேதமடைந்துள்ளது தெளிவாக தெரிகிறது.

இது ஒரு திட்டமிட்ட, துல்லியமான தாக்குதல் எனக் கூறும் அளவுக்கு கட்டடங்கள் சிதைந்துள்ளன.

ஆனால், இதுவரை ஈரானிய அரசு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.

இருந்தாலும், சில நகரங்களில் மக்கள் தெருக்களில் கூடி ஆயதொலாவின் ‘மரணத்தைக்’ கொண்டாடியதாகவும், சிலர் அதிர்ச்சியுடன் அமைதியாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஈரானிய எதிர்கட்சித் தலைவரும் நாடு கடந்து வாழ்ந்து வரும் முன்னாள் பட்டத்து இளவரசருமான ரெசா பலாவி (Reza Pahlavi), ட்ரம்பின் அறிவிப்பை வரவேற்று, “இஸ்லாமிய குடியரசின் முடிவு ஆரம்பமாகிவிட்டது” என வருணித்தார்.

35 ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அரசியல், இராணுவ, மற்றும் மதத் தலைவராக அதிகாரத்தின் உச்சியில் இருந்தவர் ஆயதொலா.

1989-ஆம் ஆண்டு பதவியேற்ற அவர், ஈரானின் நவீன வரலாற்றை வடிவமைத்த முக்கிய நபராக இருந்தார்.

ஆயதொலாவின் மரணச் செய்தி வெளிவந்தாலும், உலகம் பல கேள்விகளுடன் காத்திருக்கிறது…

ஈரானின் கட்டுப்பாடு இப்போது யாரிடம் உள்ளது?

இது ஒரு பெரிய போரின் தொடக்கமா அல்லது ஒரு புதிய புரட்சியின் உதயமா? என்பது அடுத்து வரும் நாட்களில் தெரிய வரும்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!