கோலாலம்பூர், செப் 27 – இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், மற்றும் அதிருப்திகளை கேட்டறிவதற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எப்போதுமே தயாராய் இருப்பதோடு அவற்றை தீர்ப்பதற்கும் தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறார்.
அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்களா ஆகியோருடனான சந்திப்புக் கூட்டத்தில்
இந்திய சமூகத்தினர் எதிர்நோக்கும் சிக்கல்கள் ஆராயப்பட்டன.
அதில் பேசிய பிரதமர், எந்த சமயத்தில் இந்தியர்களின் பிரச்சனையை தாம் புறக்கணித்ததில்லை என கூறியதாக அவரின் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி ஷண்முகம் மூக்கன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரதமர் சிலாங்கூருக்கு ஒன்று, ஜோகூர் மாநிலத்துக்கு இரண்டு, நெகிரி செம்பிலானுக்கு ஒன்று, கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களுக்கு முறையே ஒவ்வொன்று என ஆறு மின்சுடலைகளை நிர்மாணிக்க RM 2 கோடி நிதியை அறிவித்தார்.
இன்னும் இரண்டு மின்சுடலைகளுக்கான நிர்மாணிப்பு குறித்து சில தகவல்கள் ஆராயப்பட்ட பின்னர் அறிவிக்கப்படவிருக்கின்றன.
தொடர்ந்து கல்வி பயிலாமல் விடுபட்டு போகும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க TVET கல்வியை (தொழில்திறன் பயிற்சி) ஒரு சிறந்த மாற்றாக பிரதமர் முன்னிலைப்படுத்தினார்.
தமிழ்ப்பள்ளிகளில் கூடுதல் கட்டடம் கட்டப்படுவதற்காக RM 3 கோடி நிதியை அறிவித்திருந்ததும், 2012-ஆம் ஆண்டு சிறப்புச் செயல்திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட வேண்டிய நிர்மாணிப்புப் பணிகள் நீண்ட காலம் தடைபட்டுப் போன ஆறுபள்ளிகளின் நிர்மாணிப்புப் பணிகளையும் நிறைவு செய்திருப்பதானது தமிழ்ப்பள்ளிகளின் மீது பிரதமர் கொண்டிருக்கும் அக்கறையை நன்கு வெளிப்படுத்துகிறது.
இதனிடையே, எதிர்வரும் 6 அக்டோபர் அன்று, சிறந்த தளவாடங்களை உடைய அதிநவீன அரசாங்கத் தமிழ்ப்பள்ளியாக விளங்கப்போகும் சுங்கை சிப்புட் ஹீவூட் தமிழ்ப்பள்ளி திறப்பு விழா காணவிருக்கிறது.
இந்தப் பள்ளியின் நிர்மாணிப்பு நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்லாமல், மலேசிய இந்து சங்கம் நாடளாவிய நிலையில் நடத்திய திருமுறைப் போட்டிகளுக்கு RM230,000 நிதி வழங்கியிருந்தார்.
அடுத்ததாக, தமிழ் இலக்கியங்களை வளர்ப்பதற்காக மலாயப் பல்கலைக்கழகத்திற்கு RM 2 மில்லியன் நிதியும், தாய்மொழிக் கல்வியைத் தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்ய மலேசிய கல்வி அமைச்சுக்கு RM 2 மில்லியன் நிதியை பிரத்மர் ஒதுக்கீடு செய்திருந்தார்.
தீபாவளி நெருங்கி வரும் நிலையில், நாடளாவிய நிலையில்,தேவைப்படும் குடும்பங்களுக்காக உணவுக் கூடைகளை வழங்க பிரதமர் அவர்கள் RM 1.5 மில்லியன் நிதியை வழங்கியிருக்கிறார்.
நிலமை இவ்வாறு இருக்க, அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் இந்திய ஊழியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாகவும் அரசு நிர்வாகத்தில் இந்தியர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும். “எனது அலுவலகத்திலேயே மூன்று அதிகாரிகள் இருக்கின்றனர்,பிரதமரின் அலுவலகத்தில் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது போதிய அளவில் பணியாளர்கள் இருக்கின்றனர்.
குறிப்பாக என்னையும் கூட, இந்திய மக்களின் விவகாரங்களைக் கண்காணிப்பதற்கான சிறப்பு அதிகாரியாக பிரதமர் பணியமர்த்தியிருக்கிறார்.
இந்திய மக்களின் விவகாரங்களைக் கவனிக்கவும், அவர்களின் வளர்ச்சிக்கான இடைவெளியைக் குறைக்கவும், இந்தியர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைக் களையவும் சிறப்பாக அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர் என
ஷண்முகம் மூக்கன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
இவ்வாறு பல முன்னெடுப்புகளின் வழி இந்தியர்களின் மேம்பாட்டின் மீது பிரதமர் தனது கடப்பாட்டை காட்டி வருகிறார் என ஷண்முகம் கூறினார்.