
புது டெல்லி, ஆகஸ்ட்-9- புது டெல்லியில் இந்திய பாரம்பரிய உடையணிந்த காரணத்தால் Pitampura உணவகத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக, ஒரு தம்பதி குற்றம் சாட்டிய வீடியோ வைரலாகியுள்ளது.
“சல்வார் கமீஸ் அணிந்திருந்ததால் என்னை உள்ளே விடவில்லை; ஆனால் மேற்கத்திய நாகரீக உடையணிந்தவர்கள் பலரும் எளிதாக உள்ளே செல்கின்றனர்” என அம்மாது குற்றம் சாட்டினர்.
அதோடு உணவக நிர்வாகமும் தங்களிடம் தவறாக நடந்துகொண்டதாக அவர் கூறிக் கொண்டார்.
அணிந்திருக்கும் உடை அடிப்படையில் வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிப்பது ஏற்புடையதல்ல; எனவே இந்த உணவகம் இழுத்து மூடப்பட வேண்டுமென, வீடியோவைப் பதிவுச் செய்தவர் கூறுவதையும் கேட்ட முடிகிறது.
வீடியோ வைரலாகி, டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் (Rekha Gupta) காதுகளுக்கும் விஷயம் எட்டி விட்டது. உடனடி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
எனினும் அத்தம்பதியின் குற்றச்சாட்டை உணவக உரிமையாளர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
உண்மையில் அத்தம்பதி முன்பதிவு செய்யவில்லை; அதன் காரணமாகவே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
மற்றபடி, இந்த உடைகளைத் தான் அணிய வேண்டும், இந்த உடைகளை அணியக் கூடாது என எந்தவொருக் கட்டுப்பாடும் இல்லை; நாங்கள் அனைவரையும் வரவேற்கிறோம் என்றார் அவர்.