
புத்ராஜெயா, ஆகஸ்ட்-24-தமது மகள் பிரசன்னா டிக்ஷாவைக் கண்டுபிடிப்பதில் காவல்துறையும் அரசாங்கமும் தவறிவிட்டதாகக் கூறி, மழலையர் பள்ளி ஆசிரியை எம். இந்திரா காந்தி தொடுத்த 100 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அதே வேளை, Datuk Mohamed Zaini Mazlan தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, Muhammad Riduan Abdullah என்றழைக்கப்படும் இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் கே. பத்மநாதன் மீதான கைது நடவடிக்கையை நிறைவேற்றும் முயற்சிகளில் காவல்துறையின் சாட்சியங்களில் முக்கிய குறைபாடுகள் இருந்ததைக் கண்டறிந்தது.
எனினும், காவல்துறையின் குறிப்பிட்ட எந்தவொரு தவறும் பத்மநாதனின் கைதுக்கோ அல்லது பிரசன்னா டிக்ஷாவை மீட்டெடுப்பதற்கோ வழிவகுத்திருக்கும் என்பதைச் சாட்சியங்கள் உறுதிப்படுத்தவில்லை என நீதிமன்றத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை மற்றும் அரசாங்கத்தின் தவறுதான் தனது இழப்புக்கு நேரடிக் காரணம் என்பதையும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அதனைத் தவிர்த்திருக்க முடியும் என்பதையும் மேல்முறையீட்டாளர் நிரூபித்திருக்க வேண்டும். எனவே நிர்வாகக் குறைபாடுகளுக்காக மட்டும் தனியார் சட்ட இழப்பீடுகளை வழங்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனிடையே பத்மநாதனுக்கு எதிரான பிடியாணையை நிறைவேற்றுவதில் நாடு தழுவிய உத்தரவைப் பிறப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது உண்மைதான் என முன்னாள் காவல்துறைத் தலைவர் Tan Sri Hamid Bador ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்த நிலையில், காவல்துறையின் ஆதாரங்களில் உள்ள பலவீனங்கள், ஒட்டுமொத்த விசாரணையுமே பொய்யானது அல்லது போலியானது என்பதை நிரூபித்துவிடாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
Hamid, காவல்துறை, உள்துறை அமைச்சு மற்றும் அரசாங்கம் ஆகியவற்றை எதிர்வாதிகளாகக் குறிப்பிட்டு, இந்திரா காந்தி 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி அந்த வழக்கைத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
2009-ஆம் ஆண்டு தனது மூன்று பிள்ளைகளை ஒருதலைபட்சமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றிய பத்மநாதன் 11 மாதங்களே ஆன பிரசன்னாவைத் தம்முடன் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
2010-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி, இந்திராவிடம் அவரது மூன்று குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாட்டு உரிமையை வழங்கிய ஈப்போ நீதிமன்றம், பிரசன்னாவை உடனடியாக அவரிடம் ஒப்படைக்குமாறும் பத்மநாதனுக்கு உத்தரவிட்டது. அதன் பிறகு பத்மநாதனைச் சிறையில் அடைக்குமாறு 2014-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.



