கோலாலம்பூர், ஜனவரி-1, KTMB நிறுவனம் இன்று முதல் 100 விழுக்காடு ரொக்கமில்லா கட்டண முறைக்கு மாறுகிறது.
ETS இரயில் சேவை, நகரங்களுக்கு இடையிலான KTM இரயில் சேவை மற்றும் KTM கம்யூட்டர் சேவைகளை அது உட்படுத்தும்.
அவ்வகையில், பல அட்டை கட்டண முறையை ஏற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் விடுத்துள்ள அழைப்புக்கு ஏற்ப, MyDebit அட்டைகளோடு கிரெடிட் கார்ட்டுகளையும் ஏற்றுக் கொள்ளும் அட்டை முனையங்கள் KTMB நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
கைப்பேசி கட்டண முறைகளான Apple Pay, Google Pay, Samsung Pay ஆகியவையும் அதிலடங்கும்.
MyDebit, Visa/Mastercard, KTM Wallet மற்றும் Komuter Link அட்டைகள் வாயிலாக KTMB இரயில் நிலைய முகப்பிடங்களிலும் டிக்கெட்டுகளை வாங்கலாம்.
பயண டிக்கெட்டுகளுக்கு ரொக்கமில்லா கட்டண முறையின் அமுலாக்கம் கடந்த நவம்பர் மாதமே அறிவிக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
KTMB பயனர்களில் 82 விழுக்காட்டினர் ஏற்கனவே ETS மற்றும் தெப்ராவ் shuttle சேவைகளுக்கு இணையம் வாயிலான கட்டண முறையைப் பயன்படுத்துகின்றனர்.
அதே சமயம் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் வட பகுதிகளிலும் KTM கம்யூட்டர் சேவையைப் பயன்படுத்துவோரில் 71 விழுக்காட்டினர் ரொக்கத்தைப் பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரொக்கமில்லா கட்டண முறை குறித்த மேல் தகவல்களை www.ktmb.com.my இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.