ஜோகூர் பாரு, அக்டோபர்-19 – இல்லாத ஓர் இணையப் பங்கு முதலீட்டுத் திட்டத்தை நம்பி, 19 லட்சம் ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார் சிங்கப்பூரைச் சேர்ந்த 64 வயது முதியவர்.
ஒரு பொறியியலாளரான அந்நபர் நேற்று முன்தினம் அது குறித்து புகார் செய்ததை, ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் உறுதிப்படுத்தினார்.
கடந்தாண்டு சிங்கப்பூரிருந்த போது முகநூலில் இணையப் பங்கு முதலீட்டு விளம்பரத்தைப் பார்த்து கவரப்பட்டவர், WhatsApp-பில் வந்த link-கைத் தட்டி அதில் இணைந்துள்ளார்.
நீங்கள் முதலீடு செய்தால் மட்டும் போதும்; மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என அவரிடம் கூறப்பட்டுள்ளது.
5 முதல் 12 விழுக்காடு வரையில் இலாபம் பார்க்கலாம் எனவும் ஆசை காட்டப்பட்டுள்ளது.
அதனால் நம்பிப் போன அவ்வாடவர், தரப்பட்ட மலேசிய வங்கிக் கணக்கொன்றில் மொத்தமாக 19 லட்சத்து 48 ஆயிரம் ரிங்கிட்டைப் போட்டுள்ளார்.
போட்டப் பணத்துக்கான இலாப ஈவை எடுக்க முயன்ற சமயத்தில், மேலும் பணம் கட்ட வேண்டுமென கூறப்பட்ட போதே தாம் மோசடிக்கு ஆளானதை அவர் உணர்ந்துள்ளார்.
‘முதலீட்டில்’ சேர்த்த நபரும் மாயமானதாக, தனது போலீஸ் புகாரில் அம்முதியவர் கூறியுள்ளார்.