
வாஷிங்டன், மார்ச்-17-மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வாஷிங்டனில், அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், ஈரானுடனான போர் விரைவில் முடிவடையும் என தெரிவித்துள்ளார்.
“இந்த வாரமே அல்ல….ஆனால் விரைவில் இது முடிவுக்கு வரும், உலகம் பாதுகாப்பாகும்” என அவர் கூறிக் கொண்டார்.
ஆனால், ஈரானோ அடிபணிவதாக இல்லை…
தெஹ்ரானில் பேசிய, ஈரானிய அதிபர் Masoud Pezeshkian, “ஈரான் எந்த ‘அடக்குமுறைக்கும்’ சரணடையாது” என்றும், ”ஈரான் மண்ணில் தாக்குதல்கள் நிறைவடையும் வரை போராட்டம் தொடரும்” என்றும் சூளுரைத்தார்.
“எதிர்கால பாதுகாப்புக்கான உத்தரவாதம் எதுவும் இல்லாமல் போர் நிறுத்தம் பற்றி பேசுவது அர்த்தமற்றது” என்றார் அவர்.
இதற்கிடையில், “தொடங்கிய வேலையை முடித்து விடுங்கள்”_என அமெரிக்காவுக்கு ‘வெண்சாமரம்’ வீசும் வளைகுடா அரபு நாடுகள், வாஷிங்டனை வலியுறுத்தியுள்ளன.
வளைகுடா வட்டாரத்தின் எண்ணெய் வாழ்வாதாரத்திற்கு ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்ற ஒருவித கலக்கம் அவர்களிடம் நிலவுவதையே இது காட்டுகிறது.
அதே சமயம், ஈரான் மீதான போரில் அமெரிக்கா-இஸ்ரேலுடன் இணையுமாறு அந்த வளைகுடா நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.
போர் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், விரைவான தீர்வை விரும்பும் குரல்களுக்கும், தொடர்ந்து இராணுவ நடவடிக்கையை வலியுறுத்தும் அழுத்தங்களுக்கும் நடுவில் மொத்த உலகமும் குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறது என்பது மட்டும் உண்மை….



