
புத்ராஜெயா, மார்ச்-1,
ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழி தாக்குதல்களை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக கண்டித்துள்ளார்.
இந்த தாக்குதல் மத்திய கிழக்கை ‘அழிவின் விளிம்புக்கு’ இட்டுச் செல்லும் என அவர் எச்சரித்தார்.
இஸ்ரேல் தான் இந்த தாக்குதலைத் தொடங்கியதாகக் கூறிய அன்வார், இது வாஷிங்டன்–தெஹ்ரான் இடையிலான பேச்சுவார்த்தைகளை சிதைக்கவும், பிற நாடுகளை ஆபத்தான போரில் இழுக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சியே என சாடினார்.
எனவே, உடனடியாகவும், நிபந்தனையற்ற முறையிலும் தாக்குதலை நிறுத்துவது அவசியம் என பிரதமர் தனது ஃபேஸ்புக் பதிவில் வலியுறுத்தினார்.
நிலைமையை மேலும் மோசமாக்காமல் அரச தந்திர பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறும் அமெரிக்காவையும் ஈரானையும் அன்வார் கேட்டுக் கொண்டார்.
ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்புக் குறித்தும் அச்சம் தெரிவித்த பிரதமர், வட்டாரத் தலைவர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
முன்னதாக, இஸ்ரேலியப் படைகள் ஈரானில் வான்தாக்குதல்களை மேற்கொண்டன.
ஈரானின் இராணுவத் தளங்கள், ஏவுகணை அமைப்புகள், தலைமைச் சாவடிகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டன.
தெஹ்ரான் உட்பட பல நகரங்கள் வெடிப்பால் அதிர்ந்தன.
தெற்கு ஈரானில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் ஏவுகணை பாய்ந்து 53 மாணவிகள் கொல்லப்பட்டனர்.
ஈரானும் உடனடியாக பதிலடி கொடுத்தது.
முக்கியமாக அமெரிக்க இராணுவத் தளங்கள் உள்ள பகுதிகள் குறிவைக்கப்பட்டன.
சைரன்கள் ஒலிக்கப்பட்டு வான்வழி தற்காப்பு முறைகள் செயல்படுத்தப்பட்டன.
ஆனால், இத்தாக்குதலின் விளைவுகள் ஈரானைத் தாண்டி பரவத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக ட்ரோன்கள், ஏவுகணைகள் வளைகுடா வான்வெளியில் பாய்ந்து, அபுதாபி, குவைத், கட்டார், பஹ்ரேய்ன் ஆகிய இதர மத்தியக் கிழக்கு நகரங்களிலும் வெடிப்புகள் நிகழ்ந்தன.
பாதுகாப்பின் சின்னமாக கருதப்பட்ட துபாய் கூட அதிர்ந்தது.
அங்கு Palm Jumeirah-வில் புகழ்பெற்ற ஹோட்டல் அருகே தீ பரவி, புகை கிளம்பியது.
உலகின் மிகப் பெரிய விமான நிலையமான துபாய் அனைத்துலக விமான நிலையம் பாதுகாப்புக் கருதி மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கினர்.
சவூதி அரேபியா ஈரானின் தாக்குதலை கண்டித்து, அண்டை நாடுகளுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
இப்படி மத்தியக் கிழக்கே பற்றி எரிவதால் சந்தைகள் அதிர்ச்சியடைந்துள்ள வேளை, மத்தியக் கிழக்கு மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்…



