
கோலாலம்பூர், மார்ச்-8 – இன மற்றும் மத உணர்வுகளைத் தொடும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது, நம் செயல்களை உணர்ச்சிகள் ஆட்கொள்ள நாம் அனுமதிக்கக் கூடாது என, மேலவை உறுப்பினர் டத்தோ சி.சிவராஜ் அனைத்து மலேசியர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏரா எஃ.எம் மலாய் வானொலி அறிவிப்பாளர்கள் தைப்பூச காவடியாட்டத்தை இழிவுப்படுத்திய சர்ச்சை குறித்து பேசுகையில், சிவராஜ் அந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
சம்பந்தப்பட்ட 3 அறிவிப்பாளர்களும் மனம் வருந்தி ஏற்கனவே மன்னிப்பு கேட்டு விட்டனர்;
இனி அவ்விஷயத்தைக் கையாள வேண்டியது அதிகாரத் தரப்பின் பொறுப்பாகும்.
மேல் நடவடிக்கை எடுப்பதா வேண்டாமா என்பதை அவர்களே முடிவுச் செய்யட்டும்.
இதில், மக்களாகிய நாம் ஏன் நமக்குள் சண்டையிட்டு பகைமைப் பாராட்ட வேண்டுமென, சிவராஜ் கேள்வியெழுப்பினார்.
ஒற்றுமையை வளர்ப்பதை விட பழி சுமத்துவதில் அதிக ஆர்வம் காட்டி, இந்த நாடு சுக்கு நூறாய் நொறுங்குவதை நாம் பார்க்க விரும்புகிறோமா?
நாம் கோபத்தைத் தொடர்ந்து தூண்டிவிட வேண்டுமா?
எனவே, கட்டுப்பாடற்ற உணர்ச்சிகளுக்காக நமது நல்லிணக்கத்தைத் தியாகம் செய்ய வேண்டாமென சிவராஜ் மலேசியர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
ஏரா வானொலி சர்ச்சைக்கு பதிலடி என்ற பெயரில் facebook-கில் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் கேவலமாகப் பேசிய ஒர் ஆடவரின் செயலையும் சிவராஜ் கண்டித்தார்.
எரிந்துகொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் அந்த இந்திய ஆடவரின் செயல் அமைந்துள்ளது.
இப்படி உணர்ச்சிகளுக்கு முதலிம் கொடுத்து மலேசியர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டால், தேசமே சீரழிந்துபோகும்.
வாழ்க்கைச் செலவினம், கல்வி, பொருளாதாரம், நம் பிள்ளைகளின் எதிர்காலம் என இதை விட முக்கியமான விஷயங்களை நோக்கி தான் நமது போராட்டம் இருக்க வேண்டுமென டத்தோ சிவராஜ் வலியுறுத்தினார்.