
பெத்தாலிங் ஜெயா, அக்டோபர் -27,
ஜோகூர் மாநில போலீஸ் அதிகாரி ஒருவர், உணவகத்திற்குள் புகைபிடித்த காணொளி ஒன்று வலைத்தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த அதிகாரிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையை எடுக்கும் (tatatertib) விசாரணையைப் போலீசார் தொடங்கியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில் காணப்பட்ட அந்த நபர், குளுவாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் (IPD Kluang) பணியாற்றும் காவல்துறை உறுப்பினர் என்பது தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட போலீஸ் உறுப்பினருக்கு எதிராக முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், அதில் மேற்பார்வை மற்றும் ஒழுக்க விதிகள் மீறப்பட்டதைக் குறித்து மதிப்பாய்வுகள் செய்யப்படும் என்றும் அறியப்பட்டது.
காவல்துறையின் மரியாதையையும் நம்பிக்கையையும் குலைக்கும் எந்தவொரு அதிகாரியிடமும் உறுப்பினரிடமும் காவல்துறை ஒருபோதும் சமரசம் செய்யாது என்பதை ஜோகூர் போலீஸ் திட்டவட்டமாக கூறியுள்ளது.
சமீபத்தில், சமூக ஊடகங்களில் வைரலான காணொளியில், இரண்டு போலீஸ் உறுப்பினர்கள் ஒரு உணவகத்தில் இருப்பதும், அதில் ஒருவர் புகைபிடித்து கொண்டிருப்பதையும் காண முடிந்தது. அக்காணொளியின் கீழ் நெட்டிசன்களின் கடும் விமர்சனத்தை எழுப்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



