
கோலாலம்பூர் , அக் 16-
உள்நாட்டு வெள்ளை அரிசியின் விலையை ஒரு கிலோவிற்கு 2 ரிங்கிட் 60 சென்னிலிருந்து 3 ரிங்கிட் 60 சென்னாக உயர்த்தும் ஆலோசனை குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை.
குறைந்த வருமானம் கொண்ட பயனீட்டாளர் உட்பட, இந்த திட்டத்தின் மீதான தாக்க மதிப்பீட்டை தற்போது நடத்தி வருவதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு கூறினார்.
நெல் மற்றும் அரிசித் தொழில் போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக, விலையை அதிகரிக்கும் திட்டம் தொழில்துறை நிறுவனங்களால் அமைச்சுற்கு சமர்ப்பிக்கப்பட்டது என்று அவர் விளக்கினார்.
வெள்ளை அரிசி விநியோகத்தின் நோக்கம் குறித்த ஒரு திட்டத்தை அமைச்சு விரைவில் அரசாங்கத்தின் பரிசீலனைக்கு முன்வைக்கும் .
இந்த திட்டம் நெல் மற்றும் அரிசி உற்பத்தி செலவுகள், கட்டுப்படுத்தப்பட்ட உள்நாட்டு வெள்ளை அரிசி விலைகளின் மதிப்பாய்வு, சந்தை போக்குகள், சட்ட விதி கட்டமைப்பு மற்றும் பயனீட்டாளர் மீதான தாக்கம் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளும்.
இது நெல் மற்றும் அரிசித் தொழிலில் சீரான நிலையை அடைவதற்கான விரிவான நீண்டகால தீர்வின் ஒரு பகுதியாகும் என்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்த பதிலில் முகமட் சாபு சுட்டிக்காட்டினார்.
உள்ளூர் வெள்ளை அரிசி விநியோகம் தொடர்பான எந்தவொரு முடிவும் விவசாயிகள், பயனீட்டாளர்கள் மற்றும் அரிசி தொழில்துறை நிறுவனங்கள் உட்பட அனைத்து தரப்பினர்களின் கருத்து கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என அவர் உறுதியளித்தார்.