
லாபூ, சிரம்பான், ஜூலை 2 – நேற்று, லாபூ தாமான் காடோங் ஜெயாவில், மலிவு விலை வீடுகள் வழங்குதல் தொடர்பான வாக்கெடுப்பு விழா, உள்ளூர் அரசாங்க மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து நடவடிக்கைக் குழுவின் தலைவர், YB. துவான் அருள் குமார் ஜம்புநாதன் தலைமையில் மிக சிறப்பாக நடந்தேறியுள்ளது.
மக்களுக்கு தரமான, வசதியான மற்றும் மலிவு விலையில் வீடுகளை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மாநில அரசுக்கு, உதவும் நோக்கில் ஏற்பாடு செய்பட்ட இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் குறிப்பாக தாய்மார்களுக்கு தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் அவர் தெரிவித்து கொண்டுள்ளார்.
குறைந்த வருமானக் குழுவின் (B40) நலனுக்காக நெகிரி செம்பிலானிலுள்ள ஒவ்வொரு வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திலும் மலிவு விலைகளில் வீடுகளைக் கட்டுவதை மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது என்றும் அருள் குமார் கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு, வெவ்வேறு வாழ்க்கை தரங்களை கொண்ட மக்களுக்கு ஏற்றவாறு நியாயமான விலைகளில் வீடுகளைக் கட்டமைத்து கொடுக்கும் ஒப்புதல்களை மாநில அரசு பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாமன் கடோங் ஜெயா திட்டத்தில், A வகை மலிவு விலை வீடுகள், 100 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் இப்புதிய திட்டத்தில் அமைக்கப்படவுள்ள மலிவு விலை வீட்டுவசதி கூறுகளில் மொத்தம் 50 சதவீதத்தில், 20 சதவீதம் மலிவு விலை வீட்டுவசதிக்கு (RMM) ஒதுக்கப்பட்டுள்ளதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.