
கோலாலம்பூர், ஜன 12 – டாமன்சாராவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த ஏர் கண்டிஷன் கருவியின் Compressor வெடித்ததில் நான்கு மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர்.
அவர்களில் ஒருவர் கடுமையாக காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. Compressor ரில் இருந்து ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மார்சஸ் ( Fadil Marsus ) கூறினார்.
நான்காவது மாடியில் சிற்றுண்டிச்சாலைக்கு அடுத்துள்ள ஏர் கண்டிஷன் பராமரிப்பு பகுதியில் வெடிப்பு ஏற்பட்டதாக தங்களுக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட ஒன்பது பேரில், இருவர் ஒப்பந்த தொழிலாளர்கள், ஒருவர் பல்கலைக்கழக நிர்வாக ஊழியர், இரண்டு பேர் வெளிநாட்டு சிற்றுண்டிச்சாலை ஊழியர்கள் மற்றும் நால்வர் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பாடில் கூறினார்.
மாணவர்களில் பலர் இன்னமும் விடுமுறையில் இருப்பதால் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் அதிகமான மாணவர்கள் இல்லை.
வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் ரசாயன கண்காணிப்பு குழுவினர் முழுமையான ஆய்வை நடத்தினர். அந்தப் பகுதி பாதுகாப்பானது, ஆனால் மேலும் வெடிப்புகள் ஏற்படாமல் இருக்க முழு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் கூறினார்.
சம்பவம் நடந்த நேரத்தில், பல்கலைக்கழக நிர்வாகத்தால் அழைக்கப்பட்ட தொழில்நுட்ப பணியாளர்கள் ஏர் கண்டிஷன் அமைப்பில் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் எந்த குற்றவியல் அம்சங்களும் இல்லையென கண்டறியப்பட்டது.



