
ரெய்க்ஜாவிக் (ஐஸ்லாந்து), ஜூலை-20 – ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் பெரிய நில அதிர்வைத் தொடர்ந்து ஒரு எரிமலை வெடித்துச் சிதறியக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மஞ்சள் – ஆரஞ்சு நிறத்தில் லாவா குழம்புகளை எரிமலை வெளியேற்றுவது நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. அதுவும் தீ குழம்புகள் கொப்பளித்து மலையடிவாரத்தை நோக்கி வழிந்தோடுவது பார்ப்பதற்கே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இதையடுத்து பாதுகாப்புக் கருதி சுற்றுப்பயணிகளும் 4,000 -க்கும் மேற்பட்ட சுற்று வட்டார மக்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
தலைநகர் ரெய்க்ஜாவிக்கிற்கு (Reykjavik) அருகில் உள்ள தீபகற்பத்திலிருக்கும் இந்த எரிமலை, 80 ஆண்டுகளாக செயலற்றுக் கிடந்தது.
எனினும் 2021-ஆம் மீண்டும் செயல்படத் தொடங்கியதிலிருந்து ஐஸ்லாந்து சுமார் 12 வெடிப்புகளைக் கண்டுள்ளது.
இந்தப் பகுதியில் எரிமலை வெடிப்பு பல நூற்றாண்டுகள் கூட தொடரக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.