புத்ரா ஜெயா, டிச 11 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்களுக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்குவதில் கவனம் செலுத்தப்போவதாக தொழில்முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர் ரமணன் தெரிவித்திருக்கிறார்.
ஒரு ஆண்டுக்கு முன் துணையமைச்சராக நியமிக்கப்பட்டது முதல் வலுவான மற்றும் முழுமையான வர்த்தகத்துறை மூலம் இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.
தாம் துணையமைச்சராக நியமிக்கப்பட்டு நாளையுடன் ஒரு ஆண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு தம் மீது நம்பிக்கை வைத்து அந்த பொறுப்புக்கு நியமித்த பிரதமர் அன்வாருக்கு ரமணன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இந்திய சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கான முக்கியமாக ஏழு சிறப்பு திட்டங்களுக்கு தாம் கவனம் செலுத்தியதாக அண்மையில் தனது அலுவலகத்தில் பெர்னாமாவுக்கு வழங்கிய நேர்க்காணலில் ரமணன் கூறினார்.
SPUMI திட்டத்திற்கு 30 மில்லியன் ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீடு , அமான இக்தியார் மலேசியா மூலம் இந்திய பெண்கள் மேம்பாட்டிற்கு 50 மில்லியன் ரிங்கிட், BRIEF -i திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட், SME Corp மூலம் I-BAP திட்டத்திற்கு 6 மில்லியன் ரிங்கிட் உட்பட ஒட்டு மொத்தமாக 136 மில்லியன் ரிங்கிட் நிதியாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிதி ஒதுக்கீடுகள் கடந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்படாத ஒன்றாகும், தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கிடையிலான ஆதரவு மற்றும் வியூக ஒத்துழைப்பின் மூலம் இந்த நிதி ஒதுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த நான்கு நிதியுதவி திட்டங்களின் மூலம் இன்றைய நாள்வரை சுமார் 10,000 இந்திய தொழில் முனைவர்கள் பயனடைந்துள்ளதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் தெரிவித்தார்