புத்ரா ஜெயா, டிச 4 – பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் தலைவரிடமிருந்து கட்சிக்கு திரும்புவதற்காக எந்தவொரு விண்ணப்பத்தையும் அம்னோ பெறவில்லையென அதன் தலைலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்திருக்கிறார். இதுவரை எந்த விண்ணப்பமும் இல்லை. அவ்வாறு இருந்தால் நாங்கள் விண்ணப்பத்தை நிர்வாக குழுவிற்கு எடுத்துச் சென்று பின்னர் அம்னோ உச்ச மன்றத்திடம் வழங்குவோம் என ஸாஹிட் கூறினார். ஜனவரி அல்லது அடுத்தடுத்த மாதங்களில் கூட்டம் நடத்தப்படலாம் என்று அவர் கூறினார். நீக்கம் செய்யப்பட்ட மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட கட்சித் தலைவர்களின் மறு பிரவேசத்தை பரிசீலிக்க UMNO தயாரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தபோது ஸாஹிட் இதனை தெரிவித்தார்.
அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர் கைரி ஜமாலுடின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதோடு , முன்னாள் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஹிசாமுடின் உசேய்ன் மற்றும் முன்னாள் அம்னோ தகவல் பிரிவு தலைவர் ஷாரில் ஹம்டான் இடைநீக்கம் செய்யப்பட்டனர். முன்னாள் பாசிர் சலாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தாஜுடின் அப்துல் ரஹ்மானின் இடைநீக்கத்தை அம்னோ உச்சமன்றம் உடனடியாக மீட்டுக்கொள்வதாக நவம்பர் 25ஆம் தேதி ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.