
கோலாலாம்பூர் – ஜூலை-6 – கோலாலம்பூர் செந்தூலில் கல்லூரி தங்கும் விடுதியின் ஆறாவது மாடியிலிருந்து தவனேஸ்வரி எனும் மாணவி விழுந்து மரணமடைந்த சம்பவம், விரிவாகவும், வெளிப்படையாகவும் விசாரிக்கப்பட வேண்டும்.
பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் அதனை வலியுறுத்தியுள்ளார்.
தொடக்கக் கட்ட தகவலின் படியும், போலீஸ் புகாரின் அடிப்படையிலும், அம்மரணத்தில் சதிநாச வேலை நிகழ்ந்திருக்கலாமோ என சந்தேகம் எழுந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
தவனேஸ்வரின் மரணத்தில் குற்ற அம்சங்கள் இருக்கலாம் என்பது ஒருபுறமிருக்க, உதட்டில் வீக்கம் உட்பட அவரின் உடலில் காயத் தழும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தவிர, மரணத்திற்கு முன்பாக சமூக ஊடகத்தில் அவர் பதிவேற்றிய கடைசிப் பதிவும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
எனவே, முழு விசாரணை நடத்தி இம்மரணத்தில் நீதி நிலைநாட்டப்படுவதை போலீஸ் உறுதிச் செய்ய வேண்டும்.
ஒருவேளை குற்ற அம்சங்கள் இருப்பது உறுதியானால், சம்பந்தப்பட்டோர் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமென, சஞ்சீவன் வலியுறுத்தினார்.
போகிற போக்கில் விட்டுச் செல்லும் விஷயமல்ல இது; அதுவும் எதிர்கால கனவுகளோடு இருந்த கல்லூரி மாணவியின் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு தவனேஸ்வரிக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் நியாயம் கிடைக்கவும், நாட்டின் நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கையை நிலைநாட்டவும், போலீஸார் விசாரணை நடத்தி அறிவிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
சஞ்சீவன் முன்னதாக தவனேஸ்வரியின் வீட்டுக்குச் சென்று அவரின் பெற்றோருக்கும் குடும்பத்தாருக்கும் நேரில் ஆறுதலும் இரங்கலும் தெரிவித்தார்.
21 வயது தவனேஸ்வரி, ஜூலை 2-ஆம் தேதி பண்டார் பாரு செந்தூலில் உள்ள மாவார் அடுக்குமாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.