சுங்கை பூலோ, செப்டம்பர் -22 – சுங்கை பூலோ வட்டாரப் பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதை உறுதிச் செய்யும் முயற்சியில், அவர்களுக்கு உரிய உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில்முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சருமான டத்தோ ஸ்ரீ ரமணன் அந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
மாணவர்கள் மட்டுமின்றி, கற்றல்-கற்பித்தல் நடவடிக்கையில் பள்ளிகளுக்கும் உரிய உதவிகள் வழங்கப்படும் என்றார் அவர்.
பேங்க் ராக்யாட் அறக்கட்டளை (YBR) சார்பில் கோத்தா டாமான்சாரா வட்டார மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் கல்வி நிதியுதவியை வழங்கிய நிகழ்வில் உரையாற்றிய போது துணையமைச்சர் அவ்வாறு சொன்னார்.
அந்நிகழ்வில் சுங்கை பூலோ வட்டாரத்தைச் சேர்ந்த 5 தேசிய இடைநிலைப் பள்ளிகளுக்கு Bantuan Tuisyen Rakyat திட்டத்திற்காக 50,000 ரிங்கிட்டும், 11 தேசியப் பள்ளிகளுக்கு 55,000 ரிங்கிட்டும் வழங்கப்பட்டன.
அதோடு, தொழில்முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சின் ஒத்துழைப்போடு YBR கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தின் வாயிலாக, 500 மாணவர்களுக்கு மொத்தம் 50,000 ரிங்கிட் நிதி ஒதுக்கீடும் ஒப்படைக்கப்பட்டன.
YBR அறக்கட்டளையின் இந்த தொடர் முயற்சியானது, பிள்ளைகளின் கல்வித் தேவைகளைத் தயார் செய்வதில் B40 குடும்பங்களின் சுமையைக் குறைக்க சற்று உதவும் என்றும் டத்தோ ஸ்ரீ ரமணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
அதே சமயம் பள்ளிகளுக்கும் மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்கவல்ல திட்டங்களைச் செயல்படுத்த துணைப் புரியும்.
குறிப்பாக, Tuisyen Rakyat திட்டத்தின் கீழ் SPM மாணவர்களுக்கு இலவச டியூஷன் வகுப்புகளை எடுத்து அவர்களைத் தேர்வுக்குத் தயார் படுத்த வசதியாக இருக்கும் என அவர் சொன்னார்.