
ஈப்போ, ஜூலை-12 – ஜூன் 30-ஆம் தேதி சுங்கை கிந்தாவில் இறந்துகிடந்த ஆயிரக்கணக்கான கருப்பு திலாப்பியா மீன்களுக்கு, உண்மையில் அந்த ஆறு அசல் வாழ்விடம் அல்ல; மாறாக பொறுப்பற்ற தரப்பினரால் அவை அந்த ஆற்றில் வீசப்பட்டுள்ளன.
அறிவியல், சுற்றுச் சூழல், பசுமைத் தொழில்நுட்பம் ஆகியத் துறைகளுக்கான பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் தே கோக் லிம் (Teh Kok Lim) அதனை உறுதிப்படுத்தினார்.
அவையனைத்து ஏதோ ஒரு மீன் வளர்ப்புக் குளத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்பது, மாநில சுற்றுச் சூழல் மற்று மீன்வளத் துறைகளின் கூட்டு விசாரணையில் கண்டறியப்பட்டது.
எனவே ஆற்றுத் தூய்மைக் கேடு காரணமாக அம்மீன்கள் இறந்ததாகக் கூறப்படுவது உண்மையல்ல.
கிந்தா ஆற்றில் நீர் வாழ்வன திடீரென மடியும் அளவுக்கு நீர் தூய்மைக் கேடு எதுவும் இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது.
எனவே கிந்தா ஆற்றில் அந்த மீன்களை கொட்டிச் சென்ற தரப்பை அடையாளம் காண விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக கோக் லிம் தெரிவித்தார்.
ஈப்போ, Guan Yin சீனக் கோயில் அருகே கிந்தா ஆற்றில் ஆயிரக்கணக்கான கருப்பு திலாப்பியா மீன்கள் செத்துக் கிடந்த வீடியோ ஜூன் 30-ஆம் தேதி வைரலானது குறிப்பிடத்தக்கது.