
கிள்ளான், ஏப்ரல்-1-கிள்ளானில், மது அருந்தி, போதைப்பொருள் உட்கொண்டு மரண விபத்தை ஏற்படுத்திய ஆடவரிடமிருந்து, பாதிக்கப்பட்ட குடும்பம் 1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுக்கவிருக்கிறது.
ஒரு பாவமும் அறியாத p-hailing ஓட்டுநரான தனது கணவரை இழந்து தவிக்கும் Nurul Nadi Abdul Majid மற்றும் 2 முதல் 9 வயதிலான அவரின் 3 பிள்ளைகள் சார்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படுமென, அவர்களின் வழக்கறிஞர் Mohd Faizi Che Abu கூறினார்.
மரணத்திற்கு காரணமான ஆடவர் மீதும், சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்தின் மீது அந்த சிவில் வழக்குத் தொடுக்கப்படும்; அதற்கான பணிகளில் ஈடுபட்டிருப்பதாக அவர் சொன்னார்.
வருமான இழப்பு, வளர்க்க வேண்டிய பிள்ளைகள் மற்றும் அவர்களின் வயதை கருத்தில் கொண்டு, இந்த 1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டை தாங்கள் தோராயமாக கணக்கிட்டிருப்பதாக Faizi கூறினார்.
சட்டத் திட்டங்களோடு, முந்தைய வழக்குகளின் தீர்ப்பையும் அக்குடும்பம் பரிசீலனையில் எடுத்துக் கொண்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை சம்பவத்தில், 33 வயது Amirul Hafiz Omar-ரின் மோட்டார் சைக்கிளை மோதி, அவரின் மரணத்திற்கு வித்திட்டதாக, தொழில்நுட்பப் பணியாளரான 28 வயது R. சக்திகணபதி மீது, இன்று நீதிமன்றத்தில் கொலைக் குற்றாச்சாட்டு சுமத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.



