கிழக்கு ஜாவாவிலுள்ள செமெரு எரிமலை ஆறு மணி நேரத்தில் 8 முறை வெடித்தது

லுமா ஜாங், அக் 31 –
கிழக்கு ஜாவாவிலுள்ள Semeru எரிமலை
நேற்று காலை முதல் ஆறு மணி நேர இடைவெளியில் எட்டு முறை வெடித்தது. அதன் சாம்பல் மற்றும் அடர்ந்த புகை பள்ளத்தின் உச்சியில் இருந்து 400 முதல் 800 மீட்டர் உயரத்தை எட்டியது.
முதல் வெடிப்பு நள்ளிரவு 12.09 மணிக்கு கண்டறியப்பட்டது என்று
Semeru எரி மலை கண்காணிப்பு அதிகாரி லிஸ்வாண்டோ தெரிவித்தார். முதல் வெடிப்பு 600 மீட்டர் உயரத்தில் இருந்தது, அதைத் தொடர்ந்து குறுகிய இடைவெளியில் பல வெடிப்புகள் ஏற்பட்டன.
காலை மணி 6.02க்கு பதிவு செய்யப்பட்ட கடைசி வெடிப்பின்போது வெளிப்பட்ட சாம்பல் சுமார் 700 மீட்டர் உயரத்தைக் காட்டியது என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
Semeru எரிமலையின் நிலை எச்சரிக்கை மட்டத்தில் இரண்டாவது கட்டத்தில் உள்ளது. தென்கிழக்கு பகுதியில், குறிப்பாக சிகரத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெசுக் கோபோகன் ( Besuk Kobokan ) பகுதியில், பொதுமக்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என அதிகாரிகள் நினைவுறுத்தியுள்ளனர்.
மலை உச்சியில் இருந்து 13 கிலோமீட்டர் வரை வெப்ப மேக ஓட்டங்கள் மற்றும் எரிமலைக் குழம்பு வெளிப்படும் அபாயம் இருப்பதால், எரிமலை இருக்கும் இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள ஆற்றங்கரைப் பகுதிகளை குடியிருப்பாளர்கள் அணுகுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
3,676 மீட்டர் உயரமுள்ள Semeru எரிமலை , இந்தோனேசியாவில் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றாக திகழ்ந்துவருகிறது



