
கோலாலம்பூர், ஏப் 24 -குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஒருவரால் ஏற்பட்ட விபத்தில் நேற்று அதிகாலை உயிரிழந்த வங்காளதேச சுற்றுலாப் பயணி முசாஹித் மில்லாத் (Muzahid Millad) Gaming உள்ளடக்கங்களை உருவாக்கும் ‘அட்வான்ஸ் கேமிங்’ நிறுவனத்தைச் சேர்ந்தவர் என அவரது ரசிகர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
அவரது மரணச் செய்தி, வங்காளதேச சமூக ஊடகங்கள் முழுவதும் பெரும் துயரத்தையும் நீதிக்கான கோரிக்கைகளையும் தூண்யுள்ளது.
இந்தக் கொடிய விபத்து தொடர்பாகப் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகள் வலுத்த நிலையில், வங்காளதேசத்தின் ஆன்லைன் கேமிங் சமூகம் #JusticeForMuzahid, #JusticeForAdvanceGaming, #BangladeshDemandsJustice மற்றும் #advancegaming போன்ற ஹேஷ்டேக்குகளைப் பரப்பி வருகிறது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து அவரும் அவரது மனைவியும் பயணித்த இ-ஹெய்லிங் வாகனம் MEX நெடுஞ்சாலையில் மோதியதில் 22 வயதான முசாஹித் உயிரிழந்தார் .
அவரது மனைவியான 23 வயதான நபீசா தபஸ்ஸும் அடிபா(Nafisa Tabassum Adiba) காயமடைந்து கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தத் தம்பதியினர், விடுமுறைக்காக கோலாலம்பூரில் ஒரு வாரம் தங்குவதற்குத் திட்டமிட்டிருந்தனர்.
இதனிடையே கோரமான விபத்தில் ராணுவ வீரர் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பது தனக்குத் தெரியப்படுத்தப்பட்டதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ காலிட் நோர்டின் உறுதிப்படுத்தினார்.
எனினும் இதுகுறித்த விசாரணையை அமைச்சும் ராணுவமும் போலீசிடம் விட்டுவிடும் என்று அவர் கூறினார்.



