
குளுவாங், ஏப்-7- ஜோகூரின் குளுவாங் பகுதியில் உள்ள ஒரு நவீன விவசாயத் திட்டத்திற்கு அருகே புலியின் கால் பாதங்களின் தடங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, வனவிலங்கு அதிகாரிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அங்கு கண்காணிப்பை மேற்கொள்ளவிருக்கின்றனர்.
சிம்பாங் ரெங்காம் வனக் காப்பகத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் ஏப்ரல் 3 ஆம் தேதியன்று உள்ளூர் மக்களால் இந்தத் தடங்கள் கண்டறியப்பட்டதாக வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான Perhilitan தெரிவித்துள்ளது.
சுமார் 12 சென்டி மீட்டர் அகலமும் 11 சென்டி மீட்டர் நீளமும் கொண்ட அந்தத் தடங்கள் புலியினுடையவை என்பதை அதிகாரிகள் பின்னர் உறுதி செய்ததாக Perhilitan தலைமை இயக்குநர் அப்துல் காதிர் அபு ஹஷிம்( Abdul Kadir Abu Hashim)கூறினார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, Perhilitan 14 நாட்களுக்கு ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும்.
அதோடு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பரிசீலிப்பதற்கு முன்பு, புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க புலி பாதுகாப்புப் பிரிவு கேமராக்களைப் பொருத்தும்.
குடியிருப்பாளர்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறும், குறிப்பாக அதிகாலை அல்லது இரவு நேரங்களில், பண்ணைகள் அல்லது வனப்பகுதிகளுக்குள் தனியாகச் செல்வதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தப்படுகின்றனர் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.



