
கோலாலம்பூர், ஆகஸ்ட்-13- 13 வயது மாணவி சாரா கைரினாவின் மரணத்தை விசாரித்த அதிகாரி, சவப்பரிசோதனைக்கு கோரிக்கை வைக்காமல் சரியான நடைமுறையைப் பின்பற்றவில்லை என்பது அம்பலமாகியுள்ளது.
சாராவின் மரணம் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் நடந்ததால் பிரேத பரிசோதனைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் கூறினார்.
எனவே, சாராவின் தாயார் முன்னதாக பிரேத பரிசோதனையை நிராகரித்து சட்டப்பூர்வ அறிவிப்பில் கையெழுத்திட்டிருந்தாலும், விசாரணை அதிகாரி அதற்கு விண்ணப்பித்திருக்க வேண்டுமென இன்று புக்கிட் அமானில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் குமார் தெரிவித்தார்.
பிரேத பரிசோதனை நடைமுறையைப் பின்பற்றாததற்காக விசாரணை அதிகாரி மற்றும் அவரது மேலதிகாரி, புக்கிட் அமானின் நெறிமுறை மற்றும் தரநிலை இணக்கத் துறையின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இன்று முன்னதாக, சாராவின் மரண விசாரணைக்கு சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் உத்தரவிட்டது.
விசாரணைகளைத் தன் கட்டுப்பாட்டில் எடுப்பதற்காக புக்கிட் அமான் CID-யின் பணிக்குழு முன்னதாக சபாவுக்கு அனுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பள்ளித் தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்ததாக நம்பப்படும் சாரா, ஜூலை 16-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கால்வாயில் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
மறுநாள் Queen Elizabeth மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
எனினும், தங்கும் விடுதியிதில் பகடிவதைக்கு ஆளாகியிருக்கலாம் என, சாராவின் மரணத்திற்குப் பிறகு சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் போலீஸ் விசாரணை அறிக்கையைப் பரிசீலித்த சட்டத் துறை அலுவலகம், மறுவிசாரணைக்காக சாராவின் சடலத்தைத் தோண்டியெடுக்க உத்தரவிட்டது.
அவ்வகையில் கடந்த வாரம் சாராவின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, சவப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மீண்டும் புதைக்கப்பட்டது.