
கோலாலம்பூர், பிப்ரவரி-20-கோலாலம்பூரில் சட்டவிரோதமாக இயங்கும் கிளினிக்குகள் குறித்து மலேசிய மருத்துவச் சங்கமான MMA கடும் கவலைத் தெரிவித்துள்ளது.
அங்கு, போலி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கி வருவதாகவும், இது பொது மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் MMA தலைவர் டத்தோ Dr திருநாவுக்கரசு ராஜு எச்சரித்தார்.
இத்தகைய கிளினிக்குகளில் சிகிச்சைப் பெறும் நோயாளிகள் தவறான நோயறிதல், பாதுகாப்பற்ற சிகிச்சை முறைகள், போலி அல்லது கடத்தப்பட்ட மருந்துகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.
எனவே, அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினர்.
அண்மையில், குடிநுழைவுத் துறை Jalan Tun Tan Siew Sin பகுதியில் 9 சட்டவிரோத கிளினிக்குகளை முற்றுகையிட்டு சோதனை நடத்தியது.
அந்நடவடிக்கையில் 17 வங்காளதேசிகள் 1 மியன்மார் நாட்டவர் என 18 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.
அந்த போலி கிளினிக்குகளில் மன அழுத்தக் குறைப்பு மாத்திரைகள், antibiotics மருந்துகள், நாட்பட்ட நோய்க்கான சிகிச்சை மருந்துகள் உள்ளிட்ட பல கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவை கடத்தப்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், சோதனைக்குப் பிறகு அவர்கள் மீண்டும் வேலையைக் காட்டத் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
“இது வெளிநாட்டவர்களின் பிரச்னை மட்டும் அல்ல; மலேசியாவில் உள்ள ஒவ்வொரு நோயாளிக்கும் பாதுகாப்பான, நெறிமுறை மருத்துவ சேவை கிடைக்க வேண்டும். அதற்காக அடிக்கடி சோதனை, கடுமையான தண்டனை, மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்பு அவசியம்” என திருநாவுக்கரசு வலியுறுத்தினார்.



