
பாரிட், ஜூன் 11 – கோலா கங்சாரில் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த
மாணவர் கும்பல் ஒன்றினால் குத்தப்பட்ட கட்டொழுங்கு ஆசிரியர் ஒருவர் முகத்தில் காயம் அடைந்தார்.
சம்பந்தப்பட்ட மாணவர்களின் தலைமுடியை புதன்கிழமையன்று காலை மணி 11.30 அளவில் அந்த கட்டொழுங்கு ஆசிரியர் வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது அதிருப்தியடைந்த அந்த மாணவர்கள் ஆசிரியரை தாக்கியதாக கூறப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் பேரா மாநில கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக காத்திருப்பதாக பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ கைருடின் அபு ஹனிபா தெரிவித்தார்.
உண்மையில் ஆசிரியருக்கு எதிராக அந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் அது ஒரு பொருத்தமற்ற செயலாகும்.
ஏனெனில், ஆசிரியர்கள் என்பவர்கள் குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்து அவர்களை வளர்க்கும் கல்வியாளர்கள் என்று இன்று செய்தியாளர்களிடம் கைருடின் குறிப்பிட்டார்.
அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு, சம்பவத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கற்றல் செயல்பாட்டில் விரும்பத்தகாத விவகாரங்கள் இருந்தாலும், மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.



