
கோலாலம்பூர், ஜூன் 11 – பினாங்கு மாநகராட்சி மன்றம் (MBPP), காகம் மற்றும் புறாக்களை சுடும் நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டுமென விலங்கு நல உரிமை வழக்கறிஞர்கள் அமைப்பு (Lawyers for Animal Rights) கோரிக்கை விடுத்துள்ளது.
வரும் ஜூன் 14ஆம் தேதி நடைபெறவுள்ள “காகம் மற்றும் புறாக்களைச், சுடும் நடவடிக்கை” ஸ்ட்ரெய்ட்ஸ் குவே, தஞ்சோங் தோக்கோங் மற்றும் தஞ்சோங் பூங்கா (Straits Quay, Tanjung Tokong, & Tanjung Bungah) உள்ளிட்ட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.
நகர்ப்புறங்களில் துப்பாக்கிகளை பயன்படுத்தி பறவைகளை கொல்வது மிகவும் கவலைக்குரியதும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தானதுமென அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு முன் அறிவியல் ஆய்வு அல்லது சுற்றுச்சூழல் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதா எனவும் பினாங்கு மாநகராட்சி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்பு மற்றும் வர்த்தக பகுதிகளில் துப்பாக்கி பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து முறையான மதிப்பீடு செய்யப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்படும் பிற பறவை இனங்கள் தவறுதலாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
குப்பை மேலாண்மையை மேம்படுத்துதல், பொதுமக்கள் பறவைகளுக்கு உணவளிப்பதை கட்டுப்படுத்துதல், வாழ்விட மேலாண்மை மற்றும் இனப்பெருக்க கட்டுப்பாட்டு திட்டங்கள் போன்ற வன்முறையற்ற முறைகள் மூலம் பறவைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.



