புத்ராஜெயா, டிசம்பர்-24 – நாட்டில் கோவிட்-19 மற்றும் இன்ஃபுளுவென்சா காய்ச்சல் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தீவிர சிகிச்சைத் தேவைப்படும் சம்பவங்களில் அதிகரிப்பில்லை; புதிதாக மரணங்களும் பதிவாகவில்லை என KKM கூறியது.
டிசம்பர் 15 முதல் 21 வரை மலேசியா 1,477 கோவிட்-19 சம்பவங்களைப் பதிவுச் செய்துள்ளது.
முந்தைய வாரத்தைக் காட்டிலும் அது 14.23 விழுக்காடு குறைவாகும்.
அதே சமயம், சாதாரண வார்டுகளில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் இந்த ஒரு வாரத்தில் சரிந்துள்ளது.
கோவிட் மரணங்களைப் பார்த்தால், ஏப்ரல் 25 முதலே புதியச் சம்பவம் எதுவும் பதிவாகவில்லை.
இவ்வாண்டு பதிவான எண்ணிக்கை 58-டாகவே நீடிப்பதாக அறிக்கை வாயிலாக அமைச்சு கூறியது.
இவ்வேளையில், இன்ஃபுளுவென்சா A, B காய்ச்சல் சம்பவங்களும் 50-வது வாரத்தில் குறைந்துள்ளன.
என்றாலும் நாடு முழுவதும் இன்ஃபுளுவென்சா காய்ச்சல் பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருமென அமைச்சு கூறியது.
நிலைமைக் கட்டுக்குள் இருந்தாலும் ஆண்டிறுதியில் கோவிட் சம்பவங்களும் இன்ஃபுளுவென்சா காய்ச்சலும் அதிகரிக்கும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை.
குறிப்பாக ஜப்பான் போன்ற குளிர் சீதோஷ்ணத்தைக் கொண்டுள்ள நாடுகளில் சுவாசத் தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருவதை அமைச்சு சுட்டிக் காட்டியது.
எனவே இந்த விழாக் கால ஒன்றுகூடல்களின் போது, சுயத்தூய்மை உள்ளிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து அமுல்படுத்தி வருமாறு KKM கேட்டுக் கொண்டது.