
கெனிங்காவ், ஆகஸ்ட்-1 சபா, கெனிங்காவில் இடைநிலைப் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தி வந்த கும்பலொன்று போலீசின் அதிரடிச் சோதனையில் முறியடிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் விடுவதற்காக 2 இரண்டாம் படிவ மாணவிகள் உட்பட பதின்ம வயது பெண்களை அக்கும்பல் கட்டாயப்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களைத் தேடும் இக்கும்பல், ஒரு சேவைக்கு தலா 200 ரிங்கிட் கட்டணம் விதிக்கிறது.அதனை சந்தேக நபர்களும் பாதிக்கப்பட்டவர்களும் சரிபங்காக பிரித்துக் கொள்கின்றனர்.
பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் தாய் ஜூலை 24-ஆம் தேதி போலீஸில் புகார் செய்த போதே இவ்விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து 13 முதல் 21 வயதிலான 4 பெண்களை மீட்ட கெனிங்காவ் போலீஸ், அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, மகளிர் மற்றும் சிறார் காப்பகத்தில் தங்க வைத்துள்ளது.
விசாரணைக்காக 8 பேர் கைதான நிலையில், அதில் தரகர் வேலைப் பார்த்த 18 வயது பெண் மனித விற்பனைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு விட்டார்.