
ஜோகூர் பாரு, ஏப்ரல்-21- பிறையில்லாத தேசியக் கொடியை பிரசுரித்ததற்காக Sin Chew Daily சீன நாளேட்டின் தலைமை செய்தியாசிரியரும் துணைத் தலைமை தொகுப்பாசிரியரும், சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டே போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டனர்.தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் அவ்வாறு தெரிவித்தார்.
பொது மக்களின் சினத்தைத் தூண்டிய அவ்விஷயத்தில் சட்டத்திற்குட்பட்டு விசாரணை மேற்கொள்ள போலீஸாருக்கு முழு அதிகாரமுண்டு என்றார் அவர்.உள்துறை அமைச்சு, போலீஸ், தொடர்பு-பல்லூடக ஆணையமான MCMC ஆகியவற்றை உட்படுத்தி, 3 வெவ்வேறு கோணங்களில் அவ்விவகாரம் விசாரிக்கப்பட்டது.தவறான சின்னம் மற்றும் பெயர் பயன்பாடு மீதான 1963-ஆம் ஆண்டு சட்டம் உள்ளிட்ட சில சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸ் விசாரணை மேற்கொண்டது.
எனவே, விசாரணைக்கு உதவ வேண்டியே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என, ஃபாஹ்மி விளக்கினார்.Sin Chew Daily தலைமை செய்தியாசிரியரும், துணைத் தலைமைத் தொகுப்பாசிரியரும் கைதுச் செய்யப்பட்டதானது, சற்று அதிகபட்சமான நடவடிக்கையே என்பதுடன் அவமானத்திற்குரியது என, உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் பி.ராமாசாமி முன்னதாக சாடியிருந்தார்.
அது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஃபாஹ்மி அவ்வாறு பதிலளித்தார்.
இவ்வேளையில், MCMC-யின் விசாரணையும் இதில் தேவையானதே என்றார் அவர்.
Sin Chew Daily பத்திரிகை வடிவில் மட்டுமல்லாது, e-paper போன்ற மின்னியல் சாதன வடிவிலும் செய்தி வெளியிடுவதை அவர் சுட்டிக் காட்டினார்.சீன அதிபர் சீ சின் பிங்கின் மலேசிய வருகையின் போது, முதல் பக்கத்தில் பிறையில்லாத மலேசியக் கொடியை கார்ட்டூன் வடிவில் வெளியிட்டு அப்பத்திரிகை முன்னதாக சர்ச்சையில் சிக்கியது.