
ஷா ஆலாம், செப்டம்பர் 21 –
மலேசிய சைவ சமயப் பேரவையின் தலைமையில், 7-ஆம் உலக சைவ சமய மாநாடு கடந்த செப்டம்பர் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் ஷா ஆலாம் டூலிப் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
‘உலக அமைதிக்குச் சைவ மெய்யியலின் கொடை’ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இம்மாநாட்டில் உரையாற்றிய முனைவர் நாகப்பன் ஆறுமுகம், உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஒன்று என்றும் அவற்றின் உடல்களில் மட்டுமே வேறுபாடு காணப்படுகிறது என்றும் மிக அழகாக விளக்கினார்.
ஓரறிவு கொண்ட உயிரிலிருந்து ஆரறிவு கொண்ட மனிதன் வரை அனைத்தையும் இறைவன் காக்கின்றான். ஆனாலும் ஆறு அறிவு பெற்ற மனிதனே மற்ற உயிர்களை கொல்வதன் மூலம் அநீதியைச் செய்கின்றான் என அவர் வலியுறுத்தினார்.
உயிர்கள் அனுபவிக்கும் இன்பத் துன்பங்களுக்கு அவர்கள் செய்த நன்மை தீமைகளே காரணம் எனவும் மற்றவர் காரணமல்ல என்பதை சைவ மெய்யியல் உணர்த்துவதாக அவர் மேலும் வலியுறுத்தினார்.
இந்த மாபெரும் மாநாட்டில் “எல்லா உயிர்களுக்கும் உலகம் ஒன்றே”, “அறிவார்ந்த உயிர்களின் ஆக்கமே சைவம்”, “எல்லா உயிர்களுக்கும் இறைவன் ஒருவனே”, “வேற்றுமையில் ஒற்றுமையே உலகப் பண்பாடு”, “கடவுளின் நிலை அருவம்”, “உயிர்களின் பண்புகளில் பேதம் இல்லை” மற்றும் “சைவம் உலகப் பொதுச் சமயம்” எனும் ஏழு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கப்பட்டன.
அதேவேளை, பேரூர் ஆதீன குருமகா சந்நிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் வழங்கிய ஆசியுரை மற்றும் பண்ணிசைக் கச்சேரி மாநாட்டின் சிறப்பை மேலும் உயர்த்தின.
இரு நாள் நடைபெற்ற இம்மாநாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று சைவத்தின் ஆழத்தை கண்டும், கேட்டும், உணர்ந்தும் பயனடைந்தனர்.