Latestமலேசியா

சிலாங்கூரில் அனுமதி இல்லாத வழிபாட்டுத் தலங்களின் பிரச்சனையை அணுக புதிய நடைமுறைகள்; அமிருடின் அறிவிப்பு

சிலாங்கூரில் அனுமதி இல்லாத வழிபாட்டுத் தலங்களின் பிரச்சனையை அணுக புதிய நடைமுறைகள்; அமிருடின் அறிவிப்பு

கோலாலம்பூர், பிப்ரவரி-13,

அனுமதியில்லாமல் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களைக் கையாள புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளார் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி.

அவ்வகையில், இனி நில உரிமையாளர்கள் தனிப்பட்ட முறையில் கோவிலை இடிக்கவோ, வெளியேற்றவோ முடியாது.

மாறாக முதலில் போலீஸில் புகாரளிக்க வேண்டும்.

அதன்பின் விசாரணை நடைபெறும்; அத்துமீறல் இருப்பது நிரூபிக்கப்பட்டால் வழக்கு தொடரப்படும்.

வெளியேற்றம் அல்லது கட்டுமான இடிப்பு வேண்டும் என்றால் நில உரிமையாளர்கள் வழக்கறிஞரை நியமித்து நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டும் என்றார் அவர்.

இரண்டாவதாக, நில அத்துமீறல் செய்த தரப்புக்கு உரிமையாளர் நோட்டீஸ் அனுப்பி, மாவட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

மாவட்ட பாதுகாப்பு செயற்குழு அதிகாரிகள் பின்னர் நில உரிமையாளர், அனுமதியின்றி வழிபாட்டுத் தலத்தைத் கட்டியவர் அல்லது அதன் நிர்வாகம், போலீஸ் உள்ளிட்ட தரப்புகளை அழைத்து இரு நியாயமான தீர்வை ஏற்படுத்த பேச்சோவார்த்தை நடத்தப்படும்.

அதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றால், நீதிமன்றம் செல்லுமாறு நில உரிமையாளருக்கு அறிவுறுத்தப்படும் என அமிருடின் சொன்னார்.

இந்த நடைமுறைகள் சட்டப்படி, பிரச்னைகளைத் தீர்க்க உதவும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இவ்வேளையில், ‘LIMAS’ எனப்படும் சிலாங்கூர் புத்த, கிறிஸ்தவ, இந்து, சீக்கிய, தாவோ சமய மன்றமும் தெளிவான நடைமுறைகளை வரைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த நடவடிக்கை, வழிபாட்டு இடங்களுக்கு மரியாதை தரும் அதே வேளை, சட்டத்தின் ஆட்சியையும் சமநிலைப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

ரவாங்கில், சில தனிநபர்கள் மண்வாரி இயந்திரத்தைக் கொண்டுசென்று உச்சிமலை முனீஸ்வரர் கோயிலை உடைத்த சம்பவம் சர்ச்சையாகியுள்ள நிலையில் மந்திரி பெசார் இவ்வறிவிப்பை வெளியிட்டார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!